"வட போச்சே"
தனக்கு தானே சூனியம் வைத்துக் கொண்ட வி.ஏ.ஓ
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) பணியாற்றும் வகையில் பிரிட்டிஷ் அரசால் கட்டப்பட்ட ஓட்டு வில்லை கட்டிடம் உள்ளது.
அந்த காலகட்டத்தில் இந்த கட்டடத்துக்கு சாவடி என்று பெயர்.
இதில் கிராம நிர்வாக அலுவலர் பணியாற்றுவார்.
விசாரிப்பு என்று அழைக்கப்படும் தலையாரி என்பவரும் பணியாற்றுவார்.
அந்த காலகட்டத்தில் கால்நடைகள் அடுத்தவர் நிலத்தில் அல்லது இடத்தில் நுழைந்து விட்டால் அந்த கால்நடைகளை பவுண்டு என்று அழைக்கப்பட்ட கால்நடை பட்டி என்ற இடத்தில் அடைப்பார்கள்.இந்த பணிக்கு வி.ஏ.ஓ பொறுப்பு.
ஊரில் ஜாதி, வருவாய்,இருப்பிட சான்றிதழ் வழங்குதல் கல்லூரி, பாலிடெக்னிக்,ஐ.டி.ஐ போன்ற படிப்புகளுக்கு சான்றிதழ் வழங்குதல் போன்ற பணிகள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு முக்கிய பணியாக இருந்தது.
கூடவே முதியோர் பென்ஷன், இயற்கை பேரிடர் பணிகளும் அவர்களுக்கு இருந்தன.
அந்த வகையில் தா.பழூர் சிவன்கோயில் முட்டுச்சந்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சாவடி அமைக்கப்பட்டது.
சாதாரண ஓட்டு கட்டிடத்தில் ஒரு மேசையில் வி.ஏ.ஓ எதிர் மேசையில் ஆர்.ஐ எனப்படும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பணியாற்றினர்.
இந்த கட்டடம் கடந்த 50ஆண்டுகளாக இயங்கியது.
சமீப காலமாக இந்த ஓட்டு கட்டடம் மிக மிக பழுதான தால் இதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
கிராம நிர்வாக அலுவலராக சிவக்குமார் என்பவர் துணிச்சலாக இந்த ஓட்டை உடைசல் கட்டடத்தில் பணியாற்றினார்.
ஆனால் அதன் பிறகு அங்கு இருந்தால் உயிருக்கு ஆபத்து என்ற நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் தகவல் அறிந்த தமிழக அரசு, வருவாய் ஆய்வாளருக்கு தா.பழூர்---சுத்தமல்லி சாலையில் ஒயின் ஷாப் அருகே புதிய ஆர்.ஐ அலுவலகத்தை கட்டியது.
அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
ஆர்.ஐ அலுவலகம் மற்றும் பெண்களுக்கான சுகாதார வளாகம் என்று பெயரிடப்பட்ட கக்கூஸ் ஆகியவை திறக்கப்பட்டன.
மிக அருகில் ஒயின் ஷாப்கள் இரண்டு இருந்ததால் குடிமக்கள் தங்கள் வளாகமாக இவற்றை பயன்படுத்தினர்.
எங்கு பார்த்தாலும் பாட்டில், தண்ணீர் கப்,என்று அரசு வளாகம் பாழ்பட்டது.
சுகாதார வளாகத்தில் போதிய நீர் வசதி இல்லாததாலும் குடிமகன்களின் சேட்டையாலும் வளாகம் இயங்க முடியாத சூழ்நிலைக்கு சென்றது.
தினமும் பாட்டில்கள் மலக்கழிவுகள் மத்தியில் பணியாற்றுவதை விட ஓட்டு கட்டடம் மேல் என்று முடிவு செய்த அப்போதைய ஆர்.ஐ ,புதிய வளாகத்தை புறக்கணித்தார்.
மேலும் அதே பகுதியை சேர்ந்த சிலர் பன்றியை நெருப்பில் வேக வைத்து இறைச்சி விற்பனை செய்ததாலும் இந்த புதிய கட்டடம் புறக்கணிக்கப்பட்டது.
வேறு வழியில்லாமல் தமிழக அரசு சார்பில் அரசமரத்தடி பிள்ளையார் கோயில் தெருவில் புதிய ஆர்.ஐ அலுவலகம் அவர்கள் குடியிருப்பு கட்டப்பட்டு ஆர்.ஐ தனிக்குடித்தனம் சென்றார்.
வி.ஏ.ஓ வழக்கம் போல ஓட்டு கட்டிடத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பணியாற்றினார்.
இந்த நிலையில் சிவக்குமார் என்ற வி.ஏ.ஓவுக்கு பதிலாக முட்டுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் தா.பழூர் வி.ஏ.ஓ ஆக பொறுப்பேற்றார்.
ஓட்டு கட்டிடத்தில் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த ஓடுகளை பார்த்த இவர் உயிருக்கு பயந்தார்
அப்போது பயன்பாடுகள் இல்லாமல் கிடக்கும் பழைய ஆர்.ஐ அலுவலக கட்டிடம் குறித்த தகவல் அறிந்தார்.
அந்த கட்டடத்தை பார்வையிட்ட அவர் அதிர்ந்தார்.
எங்கு திரும்பினாலும் ஒயின் ஷாப் பாட்டில்கள் சரக்கு சார்ந்த கழிவுகள்,மூக்கை துளைக்கும் தண்ணீரே இல்லாத கக்கூஸ் வளாகம்...
இது குறித்து அரசுக்கு தகவல் தெரிவித்த அவர்,தொடர் மழை ஏற்பட்டதாலும் உரிய அனுமதி கிடைத்ததாலும் 50ஆண்டு பாரம்பரிய மிக்க சாவடி என்ற இடத்தில் இருந்து வி.ஏ.ஓ..அலுவலகத்தை ஒயின் ஷாப் அருகே உள்ள புறக்கணிக்கப்பட்ட கட்டடத்துக்கு மாற்றம் செய்ய முடிவு செய்தார்.
ஆனால் அந்த கட்டடம் பாழடைந்து கக்கூஸ் நறுமணத்தோடு இருந்ததால் வெறுத்து போனார்.
தனக்கு உட்கார நாற்காலிகள் வேண்டும் என்ற நிலையில் கை விடப்பட்ட கட்டடத்துக்கு கம்பி வேலி அமைத்தல், பிளம்பிங் ஒர்க், எலக்ட்ரிக் ஒர்க்ஸ்
,பூச்சு வேலைகள் என்று சொந்த செலவில் மேற்கொண்டார்.
கைவிடப்பட்ட வளாகத்துக்கு வண்ணம் தீட்டி வி.எ.ஓ அலுவலகம் மற்றும் குடியிருப்பு என்று பெயர் பதிவு செய்து சில நாட்கள் பணியாற்றினார்.
திடீரென்று ஒரு ஓலை...தங்களை கோடாலிகருப்பூர் பகுதி வி.எ.ஓ ஆக மாற்றி உள்ளோம் என்றது அரசு உத்தரவு.
நொந்து போன ஐயப்பன், சொந்த காசில் 50ஆயிரம் வரை செலவு செய்து அலுவலகமாக உருவாக்கினேன்...வட...போச்சே...என்ற புலம்பலோடு இன்று5ம்தேதி திங்கள் கிழமை கோடாலி கருப்பூர் வி.எ.ஓ ஆக பொறுப்பேற்கிறார்.
உள்குத்து..
இதில் என்ன காமெடி என்றால்...
ஐயப்பனுக்கு பதிலாக புதிய வி.எ.ஓ ஆக நியமிக்கப்பட்டுள்ளவர் பெயர் ஆனந்த்... ஆனால் இவருக்கு வேலை வாங்க வழி சொன்னவரே
இந்த ஐயப்பன் தான்..
பிறகு எப்படி :
அரியலூர் மாவட்டம் தா.பழூர் என்பது வருவாய் துறையினருக்கு வளம் கொழிக்கும் பகுதி..
ஒரு நாளைக்கு 400சான்றிதழ்களில் வி.ஏ.ஓ..கையெழுத்து போடும் பகுதி...
ஒரு கையெழுத்துக்கு அல்பத்தனமாக 100ரூபாய் என்றாலும் கல்லா எங்கோ போகும்.
இது தவிர ஏரிகளில் மண் சுரண்டல்,தீ விபத்து சாலை விபத்து,அனாதை பிணம்,முதியோர் பென்ஷன் என்று தா.பழூரில் காசு கொட்டும் என்பதால் இந்த ஊருக்கு பல லட்சத்தை கொட்டி வந்த அதிகாரிகளும் உள்ளனர்.
அதே வகையில்தான் ஆனந்த் என்பவரும் தா.பழூரை பிடித்தார்.
ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ கண்ணண் என்பவருக்கு நெருக்கமான...மிக நெருருருருக்கமான ஆனந்த், கைவிடப்பட்ட வளாகத்தில் வி.ஏ.ஓ அலுவலகம் தொடர்பாக போட்டு கொடுக்க ஐயப்பன் காலி...ஆனந்த் ஜாலி...
கிளைமாக்ஸ்
செப்..1ம் தேதி பணிக்கு சென்ற வி.ஏ.ஓ ஐயப்பனுக்கு அரசல் புரசலாக தகவல்கள் தெரிந்து விட்டன.
கடுப்பான அவர் சொந்த காசு 50ஆயிரம் செலவு செய்து குடிமகன்கள் வராமல் இருக்க வேலி போட்டேன்...ஒயிட் வாஷ், பெயிண்ட் செய்தேன்..மின் இணைப்பு,குடிநீர் இணைப்பு சரி செய்தேன்...அலுவலக முகப்பில் மண் அடித்து சரி செய்து இதுதான் வி.ஏ.ஓ அலுவலகம் என்பதை சரி செய்தேன்...ஆனால் எனக்கே அல்வா. என்று புலம்பியதோடு தன் சொந்த காசில் வாங்கி போட்ட மேசை, கம்ப்யூட்டர் டேபிள்,சிவப்பு நிற நாற்காலிகள் 12, குடிதண்ணீர் கேன் என்று தன் செலவில் இருந்த பொருட்கள் அனைத்தையும் விளக்குமாறு உட்பட எடுத்துக்கொண்டு.....
வட..போச்சே என்று நடையை கட்டினார்...
இன்று செப் 5ம் தேதி வரும் ஆனந்த்...பழைய பிரிட்டிஷ் மர நாற்காலிகளில் அமர வேண்டும்....
இது எப்படி இருக்கு...
ச.சட்டநாதன் அரியலூர்.
Comments
Post a Comment