புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்திலுள்ள மண்டையூர் முருகன் கோயில் அருகே திருமண மண்டபம் ஒன்று அமைந்திருக்கிறது. இதன் அருகில் கடலூர் மாவட்டம், பெண்ணாடம் தாலுகா, சோழன் நகர்ப் பகுதியைச் சேர்ந்த வீராசாமி என்ற டேனியல் (வயது: 61) என்பவர் தங்கியிருந்தார். அவர், அங்கிருந்த வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. இவர் அங்குள்ள மாத்தூர், மண்டையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு மாலை நேரங்களில் சென்று, கிறிஸ்தவ மதப் பாடல்களைப் பாடி மத போதனைப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். அப்போது, மாத்தூர் விவேகானந்தர் நகரைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவி செல்வி என்ற பிரின்சி (46) என்பவரிடம் அறிமுகமாகியிருக்கிறார். அவரின் கணவர் இறந்துவிட்ட நிலையில், செல்வியோடு வீராசாமிக்குத் திருமணம் மீறிய உறவு எற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் வீராசாமி, செல்வியிடம், தான் தனியாக தங்கியிருப்பதாகவும் தனக்கு சமையல் மற்றும் வீட்டு வேலை செய்வதற்கு ஆள் ஒருவர் தேவை என்றும் கூறியிருக்கிறார். அதைக்கேட்ட செல்வி, 'எனக்கும் கணவர் இல்லை. வேலையில்லாமல் வீட்டில் இருக்கிறேன். மத்த ஆள் எதற்கு... நானே உங்களுக்குச் சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகள் செய்வதற்கு வருகிறேன்' என்று கூறியிருக்கிறார். வீராசாமியும் அதற்கு சம்மதிக்க, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு டேனியல் வீட்டுக்குச் சென்று தங்கி, அங்கேயே வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில் வழக்கம்போல மத போதகர் வேலைக்குச் சென்றுவிட்டு, மீண்டும் வீட்டுக்கு வந்து உணவருந்திவிட்டு இருந்திருக்கிறார். வீட்டில் செல்வியும் இருந்திருக்கிறார்.
நேற்று காலை 6 மணியளவில் டேனியல் வீட்டின் வாசலில் செல்வி அழுதுகொண்டு அமர்ந்திருந்திருக்கிறார். அதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள், என்ன, ஏது என்று விசாரித்தபோது, மத போதகர் டேனியலை, தான் கொலைசெய்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ந்த அங்கிருந்தவர்கள், உடனடியாக இது குறித்த தகவலை மண்டையூர் காவல் நிலைய போலீஸாருக்குத் தெரிவித்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், கீரனூர் டி.எஸ்.பி செங்கோட்டு வேலன், மாத்தூர் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், மண்டையூர் உதவி ஆய்வாளர் சௌந்தர்ராஜன் உள்ளிட்ட போலீஸார் சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்றனர். அங்கே கொலைசெய்யப்பட்டுக் கிடந்த டேனியல் உடலைப் பார்வையிட்டு, அங்கிருந்த செல்வியிடம் விசாரணை நடத்தினர். அவர்களின் விசாரணையில் செல்வி, "மத போதகர் டேனியல் எனக்கு தினமும் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தார். அதேபோல நேற்று முன்தினம் இரவும் என்னிடம் அளவுக்கு அதிகமாக செக்ஸ் வைத்துக்கொண்டு, டார்ச்சர் செய்தார்.
அதனால், எனக்கு அவர்மீது வெறுப்பு ஏற்பட்டு, அவரைக் கீழே தள்ளியதில் அவர் மயக்கமடைந்தார். அப்போது அவரது வீட்டில் மோட்டார் சைக்கிளிலிருந்து கழற்றிவைக்கப்பட்ட செயின் ஸ்பிராக்கெட் மூலம் முகம் மற்றும் தலையில் வெட்டினேன். அதனால், ரத்த இழப்பு ஏற்பட்டு, அவர் இறந்துவிட்டார்" என்று தெரிவித்திருக்கிறார். பின்னர், கொலைசெய்யப்பட்ட மத போதகர் டேனியல் உடலை போலீஸார் கைப்பற்றி உடற்கூறாய்வு செய்வதற்காக, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து, வழக்கு பதிவுசெய்த மண்டையூர் காவல் நிலைய போலீஸார், செல்வியைக் கைதுசெய்து, சிறையில் அடைத்தனர்.
Comments
Post a Comment